டார்க் வெப்… அப்படியென்றால் என்ன? - தமிழ் IT

Latest

Monday, August 8, 2016

டார்க் வெப்… அப்படியென்றால் என்ன?

darweb_1

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!

டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப். 

கண்ணுக்குத் தெரியாத இருளுலகம்

நாம் அடிக்கடி விசிட் செய்யும் தளங்களை பட்டியலிட்டால் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும். ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்ளிப்கார்ட், விக்கிப்பீடியா என விரல் விட்டு எண்ணிவிடலாம். இவை எல்லாம் சாதாரணமாக தேடினாலே கிடைத்துவிடும் வகை. இவ்வகை இணையம், Surface web எனப்படுகிறது. அதாவது, எந்த வகை தடையும், மறைப்புமின்றி நீங்கள் தேடியவுடன் சர்ச் ரிசல்ட்டில் வந்து விழும் வகை. இன்னும் சில தளங்கள் உள்ளன. அவற்றை நீங்கள் நார்மல் ப்ரவுசரில் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது. காரணம், கூகுள் போன்ற சர்ச் என்ஜின்கள் பயன்படுத்தும் அல்காரிதம்கள், க்ராலிங், இன்டெக்ஸிங் டெக்னிக்குகள் எதுவும் இந்த தளங்களிடம் செல்லுபடியாகாது. இவற்றை டார்க்வெப் அல்லது டீப்வெப் என அழைக்கிறார்கள். இந்த தளங்களை Tor போன்ற ஸ்பெஷல் ப்ரவுசர்களின் வழி மட்டுமே அக்சஸ் செய்ய முடியும்.  

Tor வரலாறு

Tor சாஃப்ட்வேரை 90களின் மத்தியில் வடிவமைத்தது அமெரிக்க கடற்படையின் ஆராய்ச்சிப் பிரிவு. அமெரிக்க உளவு ரகசியங்களை, இணையத்தில் மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைக்க இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தத் தொடங்கினார்கள். 2004-ல் இந்த கோடிங் பொதுவெளியில் வெளியிடப்பட்டது. அதன்பின் The Tor Project, Inc என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் இந்த சாஃப்ட்வேரை வைத்து ஒரு நெட்வொர்க் உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அதில் வெற்றியும் பெற்றுள்ளது.

darweb_4

என்ன ஸ்பெஷல் இந்த ப்ரவுசரில்?

நீங்கள் சாதாரணமாக ப்ரவுஸ் செய்யும்போது ஒரு தகவலை தேடுவது, டைரக்ட் டூ வே ட்ராபிக் எனப்படுகிறது. சிம்பிளாக சொல்லப்போனால், உங்கள் கணினியை A என வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் தேடும் தகவல் சர்வர் B- ல் ரிக்வ்ஸ்ட்டாக பதிவாகிறது. பின் அதற்கான டேட்டாவை,  சர்வர் உங்கள் கணினிக்கு அனுப்பும். இது முழுக்க முழுக்க A,B ஆகிய இரண்டுக்கும் இடையில் நடக்கும் நேரடித் தகவல் பரிமாற்றம். இந்த முறையில் தகவல் கேட்டது யார், எங்கிருந்து பெறப்பட்டது போன்ற தகவல்களை எளிதில் ட்ரேஸ் செய்துவிடலாம். 

ஆனால் டார் போன்ற ப்ரவுசரில் இந்த டைரக்ட் செயல்முறை இருக்காது. அதே தகவலை நீங்கள் உங்கள் சிஸ்டம் A-வில் இருந்து தேடினால் அது ரேண்டமாக C,F,J,K,O என ஏகப்பட்ட சர்வர்களின் வழி சென்று B-ஐ அடைகிறது. இதனால் சர்வர் B-யில், ரிக்வஸ்ட் விடுத்த சிஸ்டமை பற்றிய தகவல்கள் எதுவும் பதிவாகாது. நம் சிஸ்டமிலும் எந்த சர்வரில் இருந்து நாம் கேட்ட தகவல் பெறப்பட்டது என்ற தகவல் பதிவாகாது. இப்படி சுத்தி விடுவதை 'virtual tunnel' எனக் கூறுகிறார்கள். இந்த ரகசியத்தன்மைதான் டார் ப்ரவுசரின் பலம். டார்க்வெப்பின் கொள்கை.

யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சிலர் இஷ்டப்பட்டதை இங்கே செய்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக எதையாவது செய்தால் போலீஸ் ஒவ்வொரு சர்வராய் தேடி சம்பந்தப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடிப்பதற்கு மிகுந்த சிரமமாகிவிடும். காரணம், ஒரு தகவலை நான்காயிரம் ரவ்ட்டர்களின் வழிகூட ரிலே செய்ய டார் ப்ரவுசரால் முடியும் என்பதுதான். இதனாலேயே டார்க்வெப்பை onionland எனவும் அழைக்கிறார்கள். வெங்காயத்தை போல பல அடுக்கு பாதுகாப்பு இருப்பதால் இந்தப் பெயர்.

இந்த ப்ரவுசரை இன்ஸ்டால் செய்வது சுலபம். பார்க்க மொஸில்லா ஸர்ச் போலதான் இருக்கும். இதை விண்டோஸில் இன்ஸ்டால் செய்வதை விட லினக்ஸில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவது பாதுகாப்பாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.

என்னதான் இருக்கிறது டார்க்வெப்பில்?

பொது இணையத்தில் இருப்பது போலவே இங்கும் நல்ல தளங்களும் இருக்கின்றன. தீய தளங்களும் இருக்கின்றன. குறிப்பாக Whistleblowers எனப்படும் அரசாங்கத்தின் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவரும் நபர்கள், பெரிதும் நம்புவது டார்க்வெப்பைதான். அமெரிக்க சி.ஐ.ஏவின் ரகசியங்களை அம்பலப்படுத்திய எட்வர்ட் ஸ்னோடென்,  டார்க்வெப்பின் அதி தீவிர ஆதரவாளர். பேரரசுகளின் ரகசியங்களை சாமான்யர்களும் வெளிப்படுத்த முடிவது இங்கேதான் என்பது அவரின் வாதம்.  

ஜூலியன் அசாஞ்சேயும், விக்கிலீக்ஸும் பலமாக கால் பதிப்பதற்கு உதவியாய் இருந்தது Tor ப்ரவுசரும், டார்க்வெப்பும்தான். இதுபோக, தங்களை மாபெரும் அரசுகள் கண்காணிப்பதை விரும்பாத தொழில்நுட்ப வல்லுநர்களும், சமூக ஆர்வலர்களும் டார்க்நெட்டை பயன்படுத்துகிறார்கள். அதுவும் சீனா போன்ற இணையக் கட்டுபாடுகள் மிகுந்த நாடுகளில் டார்க்வெப் அரசியல் அத்துமீறல்களை வெளிக்கொண்டுவர பெரிதும் பயன்படுகிறது.

darweb_3

இது நாணயத்தின் ஒருபக்கம் மட்டுமே. எல்லாவற்றுக்கும் இருப்பது போல டார்க்வெப்பிற்கும் ஒரு கொடூர முகம் இருக்கிறது. ஆள்கடத்தல், போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம், ஆயுத வியாபாரம், ஹேக்டிவிசம் போன்றவையும் இங்கு எக்கச்சக்கமாக நடக்கின்றன. டார்க்வெப்பில் இருக்கும் டேட்டாக்களில் 15 சதவீதத்திற்கும் மேல் இருப்பது போதைமருந்து வியாபாரம்தான் என்கிறார் கேரத் ஓவன் என்ற ஆராய்ச்சியாளர்.  

நாம் ஆன்லைனில் ப்ளிப்கார்ட் போன்ற தளங்களில் பொருட்கள் வாங்குவது போல, வெளி மார்க்கெட்டில் கிடைக்காத போதை மருந்துகள், ஆயுதங்களை விற்க பிரத்யேக தளங்கள் டார்க்வெப்பில் இயங்குகின்றன. இந்த தளங்களில் ஏதாவது ஒன்றை வாங்க விரும்பினால் 'Buy Now' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனே அந்த விற்பனையாளர் அவரின் வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புவார். அதில் அந்த பொருளுக்கான தொகையை பிட்காயின் எனப்படும் டிஜிட்டல் கரன்சி முறையில் செலுத்த வேண்டும். ( இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் இந்திய மதிப்பு 42 ஆயிரம் ரூபாய். கரன்சியை பிட்காயினாக மாற்றித் தருவதற்கென்றே ஏராளமான நிறுவனங்கள் உலகளவில் செயல்படுகின்றன ). இந்த பிட்காயின்கள் Escrow எனப்படும் மூன்றாம் நபரின் அக்கவுன்ட்டில் முதலில் வரவு வைக்கப்படும். வாடிக்கையாளருக்கு பொருள் போய் சேர்ந்தவுடன் விற்றவரின் கணக்கிற்கு பிட்காயின் சென்று சேர்ந்துவிடும். இந்த பாதுகாப்பான நடைமுறை காரணமாக ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கில் பிட்காயின்கள் டார்க்வெப் சந்தைகளில் புழங்குகின்றன. 

இதுபோக, இன்னும் ஏராளமான நெட்வொர்க்குகள் இந்த பரந்த பிரதேசத்தில் இயங்குகின்றன. ஹேக்கர்கள், தங்கள் சேவைகளை குறிப்பிட்ட தொகைக்கு விற்பார்கள். சர்வதேச கூலிப்படைகள், ஐ.எஸ் போன்ற தீவிரவாத அமைப்புகள் போன்றவையும் இங்கே இயங்குகின்றன. இதுபோக, Cicada 3301 போன்ற கோட்பிரேக்கர்களின் நெட்வொர்க்களும் இங்கே செயல்படுகின்றன. இங்கு நடைபெறும் வர்த்தகம் அனைத்துமே பிட்காயின்கள் கொண்டுதான்.   

சாமான்யனுக்குத் தடா!

டார்க்வெப்பை ஏதோ Tor இன்ஸ்டால் செய்தவுடன், ஜஸ்ட் லைக் தட் அக்சஸ் செய்ய முடியாது. சாதாரணமாக எதையாவது தேடினால் லிங்க்களின் வழி அவற்றை கண்டுபிடிக்கலாம். ஆனால் டார்க்வெப் தளங்கள் Node-களை வைத்து செயல்படுகின்றன. எனவே சும்மா தேடினால் எதுவும் கிடைக்காது. இதற்கென பிரத்யேக டைரக்டரிகள் செயல்படுகின்றன. அவற்றை தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம்தான். இதுபோக, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தளங்கள் ஜாகை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு தடவை நீங்கள் சென்ற தளம் அடுத்த தடவை காணாமல் போயிருக்கும். அதன் புது நோடை தேடி அலைய வேண்டும். எஃப்.பி.ஐ போன்ற முன்னணி துப்பறியும் நிறுவனங்கள் முடிந்தவரை போர்னோக்ராபி, போதை மருந்து வியாபாரம் போன்றவற்றை தடை செய்யப் போராடுகின்றன. அவர்களின் கையில் மாட்டினால் களிதான். மாட்டமாட்டோம் என அசட்டையாக இருந்த 'சில்க் ரோட்' என்ற பில்லியன் டாலர் நெட்வொர்க்கை 2013-ல் கண்டுபிடித்து, விலங்கு மாட்டியது எஃப்.பி.ஐ. போர்னோக்ராபியை ப்ரவுஸ் செய்தால் நீங்கள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சாமான்யர்கள் விலகி இருப்பதே நல்லது.

darweb_2

'டார்க்வெப்பில் யாரையும் நம்பக்கூடாது. வெப் கேமராவை டேப்பால் கவர் செய்துவிடவேண்டும். அங்கிருக்கும் எந்த ஃபைலையும் டவுன்லோட் செய்துவிடக்கூடாது. அதன் உள்ளே இருக்கும் மால்வேர்கள் உங்களின் டிஜிட்டல் தரவுகளை திருடிவிடலாம். கடைசியாக, அங்கிருக்கும் ஃபோரம்களில் யாரையும் தப்பித் தவறி கூட கிண்டல் செய்துவிடக்கூடாது. அவர்கள் கடுப்பில் உங்கள் சிஸ்டமை ஹேக் செய்து, அத்தனை பெர்சனல் சங்கதிகளையும் முடக்கிவிடலாம். எவ்வளவுக்கு எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆபத்தும் இருக்கிறது. ஃபேஸ்புக், ட்விட்டரைவிட டார்க்வெப் நம்மை பயங்கரமாக அடிக்ட் ஆக்கிவிடும். பின் அதிலிருந்து மீள்வது சிரமம். எனவே தேவையில்லாமல் அந்தப்பக்கம் காற்று வாங்கக் கூட போகாதீர்கள்' என எச்சரிக்கிறார் டார்க்வெப்-பை பயன்படுத்தி சலித்துப் போன நண்பர் ஒருவர். 

உண்மைதான். த்ரிலுக்காக அங்கே செல்லத் தொடங்கி வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் ஏராளம். இவற்றை எல்லாம் தாண்டி டார்க்வெப் மூலம் நடக்கும் நல்ல விஷயங்களுக்காகவே உலகம் முழுவதும் அதற்கு ஆதரவு அலை வீசுகிறது. சுத்தியலை, ஆணி அறையவும் பயன்படுத்தலாம், ஆளைக் காலி செய்யவும் பயன்படுத்தலாம். டார்க்வெப்பும் சுத்தியல் மாதிரிதான். நாம் பயன்படுத்துவதை பொறுத்து நமக்கு அது எதிர்வினையாற்றும்.

-நன்றி : விகடன்

No comments:

Post a Comment

Pages