எச்சரிக்கை–போலியான Microsoft Security Essentials - தமிழ் IT

Latest

Monday, November 7, 2016

எச்சரிக்கை–போலியான Microsoft Security Essentials

microsoft-security-essentials-logo

மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் இயக்க முறைமையுடன், வைரஸ்களையும் மால்வேர் செயலிகளையும் தடுக்க Microsoft Security Essentials என்னும் செயலியை இணைத்தே வழங்கி வருகிறது. தற்போது அதைப் போன்றே போலியான செயலி ஒன்று வைரஸ் ஆக பரவி வருவதாக மைக்ரோசாப்ட் எச்சரித்துள்ளது. (https://blogs.technet.microsoft.com/mmpc/2016/10/21/beware-of-hicurdismos-its-a-fake-microsoft-security-essentials-installer-that-can-lead-to-a-support-call-scam/)
டிஜிட்டல் உலகில் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய அரிதான விஷயமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக உள்ளது. நாம் வாழும் உலகம், எப்போதும் தொடர்பில் உள்ளதாக இருப்பதால், நம் கம்ப்யூட்டர்களில், ஸ்மார்ட் போன்களில் ஹேக்கர்கள் நுழைவது மிக எளிதாக உள்ளது. இதைத் தடுக்க எத்தனை செயலிகள் இருந்தாலும், அவற்றை மீறி ஹேக்கர்கள் தங்கள் வேலையைக் காட்டிக் கொண்டுதான் உள்ளார்கள்.
போலியாக வரும் மால்வேர் செயலியின் பெயர் Hicurdismos. இது செக்யூரிட்டி எசன்சியல்ஸ் செயலியை இன்ஸ்டால் செய்திடும் புரோகிராமாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. ஆனால், இது ஒரு மால்வேர் புரோகிராம். இதை இன்ஸ்டால் செய்தவுடன், நமக்கு விண்டோஸ் சிஸ்டம் க்ராஷ் ஆனால் தரப்படும் நீல நிறத் திரை (Blue Screen of Death (BSOD)) காட்டப்படும். இது போலியான திரை. இதன் மூலம் நம்மை அதிர்வடைய வைத்து, தன் நோக்கத்தை இந்த மால்வேர் செயல்படுத்திக் கொள்கிறது.
ஆனால், ஒருவர் இந்த போலியான செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளாரா என்று அறிந்து கொள்ள சில வழிகள் இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
இந்த மால்வேர் புரோகிராமிற்காக setup.exe என்ற பைல் தரவிறக்கம் செய்யப்படும். ஆனால், மைக்ரோசாப்ட் இது போன்ற பெயரில் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் இன்ஸ்டாலர் எதையும் தருவதில்லை.
இந்த மால்வேர் தரும் நீலத் திரையில், தொடர்பு கொள்ள தகவல் தரப்பட்டிருக்கும். விண்டோஸ் கிராஷ் ஆனால் கிடைக்கும் நீலத்திரையில் அது போல தகவல்கள் எதுவும் தரப்படுவதில்லை.
மால்வேர் பைல் மிகவும் மாறுபட்ட அளவுகளில் இருக்கும். 1 எம்.பி.க்கும் குறைவாக இருக்கும். மைக்ரோசாப்ட் பைல்கள் பெரியதாக இருக்கும். இந்த பைலில் காட்டப்படும் நிறுவனத்தின் பெயரிலும் வேறுபாடு இருக்கும்.
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளில், செக்யூரிட்டி எசன்சியல்ஸ் செயல்பாடு, விண்டோ டிபண்டர் (Windows Defender) செயலியில் இணைக்கப்பட்டிருப்பதால், அவை தேவை இல்லை என இந்த அறிவிப்பில் காட்டப்படும்.
இந்த மால்வேர் காட்டும் நீலத் திரையில், கம்ப்யூட்டர் பாதிக்கப்பட்டதாகக் காட்டப்படுவதுடன், தொழில் நுட்ப உதவிக்காக, உடனடியாக ஓர் இலக்கம் தரப்பட்டு அதனைத் தொலைபேசியில் அழைக்குமாறு அறிவிப்பு தரப்படும். இந்த் எண்ணை அழைக்கச் சொல்வது ஒரு ஏமாற்று செய்தியாகும். இந்த எண்ணை அழைத்தால், மறுமுனையில் பேசுபவர், கம்ப்யூட்டரில் உள்ள பிரச்னையைச் சரி செய்திட கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும் என அறிவிப்பார். உண்மையில் கம்ப்யூட்டரில் எந்தப் பிரச்னையும் இருக்காது.
இந்த மால்வேர் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை அடைந்துவிட்டால், அதனை விண்டோஸ் டிபண்டர் செயலியைக் கொண்டு நீக்கலாம். இதற்கு இணைய இணைப்பு தேவை இல்லை. இணைய இணைப்பு இல்லாமல், டிபண்டர் செயலியை இயக்கி, இந்த மால்வேர் புரோகிராமை நீக்கலாம். மேலும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் ரீ ஸ்டார்ட் செய்திடத் தேவை இருக்காது.
இது போல உங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம் செயல்பாடு தென்பட்டால், மைக்ரோசாப்ட் உடனே, அதனைத் தனக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து தெரிவிக்க நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி: http://support.microsoft.com/reportascam

No comments:

Post a Comment

Pages