"AI பயன்பாட்டால் 90% ஊழியர்கள் பணி நீக்கம்" இ-காமர்ஸ் நிறுவனம் பெருமிதம்... ஊழியர்களின் நிலை என்ன? - தமிழ் IT

Latest

Thursday, July 13, 2023

"AI பயன்பாட்டால் 90% ஊழியர்கள் பணி நீக்கம்" இ-காமர்ஸ் நிறுவனம் பெருமிதம்... ஊழியர்களின் நிலை என்ன?

Dukaan C.E.O Suumit Shah! ( @suumitshah )


"ஏஐ சாட்பாட்டினால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து, 90 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறோம்..." - டுகான் நிறுவனத்தின் சி.இ.ஓ சுமித் ஷா

செயற்கை நுண்ணறிவு பல ஊழியர்களின் வேலையைப் பறிக்கும் என்று பல தொழில்நுட்ப நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அதற்கு உதாரணமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக ஊழியர்கள் நீக்கப்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போது பெங்களூருவை தளமாக கொண்டு செயல்பட்டு வந்த இ - காமர்ஸ் நிறுவனமான டுகான் (Dukaan), வாடிக்கையாளர் சேவையில் பணிபுரிந்து வந்த ஊழியர்களில் 90 சதவிகிதத்தினரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து டுகான் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சுமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஏஐ சாட்பாட்டினால் வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து, 90 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கிறோம்.  

ஏஐ சாட்பாட்டினால் முதல் பதில் அளிக்கும் நேரம் 1 நிமிடம் 44 வினாடிகளில் இருந்து இன்ஸ்டன்ட்டாக முன்னேறியது. தீர்வு காணும் நேரம் 2 மணிநேரம் 13 நிமிடங்களில் இருந்து, 3 நிமிடம் 12 வினாடிகளானது. வாடிக்கையாளர் பிரிவின் சேவை செலவுகள் 85 சதவிகிதம் குறைந்துள்ளது’’ என ஏஐ சாட்பாட்டால் நேரம் மற்றும் செலவுகள் குறைந்ததால், ஊழியர்களை நீக்கியது குறித்து பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

பணிநீக்க நடவடிக்கை நிறுவனத்திற்கு லாபம் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவரின் இந்த செயலுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.


பலரும் அந்த நிறுவனத்தையும், சுமித் ஷாவையும் விமர்சித்து வருகின்றனர். இவரின் இந்த அதிரடி செயல் மாதச் சம்பளம் வாங்கும் பல ஊழியர்களின் நிலையைக் கேள்விக் குறியாக்கி உள்ளது.

``இறுதியில் உழைக்கும் ஊழியர்கள் ஒரு போதும் உயரப்போவதில்லை, ஊழியர்களின் உழைப்பை வாங்கிய நிறுவனம் எந்த காலத்திலும் ஊழியர்களை நினைக்க போவதுமில்லை'' என ஊழியர்கள் தரப்பில் இருந்து ஆதங்க குரல்கள் ஒலித்து வருகின்றன.

No comments:

Post a Comment

Pages