அனைத்து சாதனங்களுக்கும் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம் - தமிழ் IT

Latest

Monday, August 4, 2014

அனைத்து சாதனங்களுக்கும் ஒரே ஆப்பரேட்டிங் சிஸ்டம்

E_1407059499  மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 8 சிஸ்டத்தினை வெளியிட்ட போது, அதே கட்டமைப்பில் டேப்ளட் பி.சி. மற்றும் விண்டோஸ் மொபைல் போன்களுக்குமான சிஸ்டத்தினை வெளியிட்டது. இந்த நிலையின் அடுத்த கட்டமாக, லேப்டாப் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் ஆகிய அனைத்தும் இயங்குவதற்கு ஒரே இயங்கு தளத்தினை அமைக்க முயற்சித்து வருகிறது. இந்த வகையில், விண்டோஸ் போன், விண்டோஸ் ஆர்.டி மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே சிஸ்டமாக வடிவமைக்கப்படும்.
இந்த தகவலை மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்கள் மக்களிடம் அவ்வளவாக வரவேற்பைப் பெறவில்லை. இதனால், இந்நிறுவனத்தின் வருமானம் மிகக் குறையத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாகவும், தொழில் நுட்பத்தில் அடுத்த படியாகவும், இந்த புதிய முயற்சியில் மைக்ரோசாப்ட் இறங்கியுள்ளது.
வருமானக் குறைவினாலும், தங்கள் தயாரிப்பு பிரிவுகளை ஓர் ஒழுங்கமைதிக்குக் கொண்டு வரும் முயற்சியினாலும், ஏற்கனவே 18,000 ஊழியர்களை மைக்ரோசாப்ட் பணியிலிருந்து விலக்க முடிவெடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில், பழைய முதல் நிலை மற்றும் வருமானப் பெருக்கத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைக் கொண்டு செல்லும் பொறுப்பினை இந்தியரான சத்யா நாதெள்ளா எதிர் கொண்டுள்ளார்.
அடுத்து வர இருக்கும் விண்டோஸ் 9 சிஸ்டம் இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமையுமா என்பது இனித்தான் தெரிய வரும். தற்போது ஸ்மார்ட் போன்கள் மட்டுமே தொடு உணர் திரை இயக்கத்தினை முழுமையாகக் கொண்டு இயங்கி வருகின்றன. அதே போல பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களும் மாற்றப்பட்டு, ஒரே இயக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைக்கப்படுமா? அல்லது இப்போது விண்டோஸ் 8 இயங்குவது போல, மவுஸ், கீ போர்ட் மற்றும் தொடுதிரை இயக்கத்தில் வர இருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்குமா என்பது இனிமேல் தான் தெரியவரும்.

(TM)

No comments:

Post a Comment

Pages